ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியின் மற்றொரு எம்.பி. நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியை விட்டும் விலகினார்.
வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களிடையே செல்வாக்கு இல்லாத அல்லது செல்வாக்கு குறைந்த எம்.பி., எம்எல்ஏ.க்கள் பலரை வரும் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட வைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் மாற்றம்: இதற்காக 4-வது கட்டமாக வேட்பாளர்களை மாற்றிய பட்டியலை ஜெகன் வெளியிட்டுள்ளார். இதனால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை எதிர்க்கட்சிகளும் தீவிரமாக விமர்சித்து வருகின்றன. வேட்பாளர்களை மாற்றுவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியுமா, அவப்பெயர் நீங்கிவிடுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் இதுவரை 4 எம்எல்ஏக்கள் மற்றும் 4 எம்பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை விட்டும் விலகியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லூர் மாவட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். இது முதல்வர் ஜெகனுக்கும் அவரது கட்சியினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.