மழை பெய்தால் பெரியவர்களுக்கு குடை ஞாபகம் வரும்; பள்ளி மாணவர்களுக்கோ முதலில் ஞாபகம் வருவது பள்ளி விடுமுறைதான்! அதுவும் அடுத்த நாள் கணிதத் தேர்வு என்றால் சொல்லவே வேண்டாம். “மழை பெய்யுதுல சார்… கொஞ்சம் மனசு வச்சு லீவு கொடுங்க சார்!” என்று மாணவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்கள் வைத்த கோரிக்கைகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாகக் கூறி, பள்ளி மாணவர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் மெசெஜ் அனுப்பி விடுமுறை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். “சார், இங்கே நல்ல மழை பெய்கிறது. பள்ளிக்குச் செல்லும் வழியெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது. சீருடை நனைந்து விடுகிறது. புத்தகப் பையைச் சுமந்துகொண்டு நடந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” என மாணவர்கள் தங்களது கஷ்டங்களை எடுத்துரைத்துள்ளனர்.
அதிலும் சில மாணவர்கள், “பள்ளிக் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பேருந்து வருகிறது. ஆனால், கல்லூரி மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்தைப் பிடிக்க வேண்டியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வழுக்கி விழுந்துவிடுவோமோ என்ற பயமாக இருக்கிறது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கொடுங்கள் சார்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒரு மாணவர் அனுப்பிய செய்தியில், “சார், நாளைக்கு கணிதத் தேர்வு இருக்கிறது. ஆனால், இவ்வளவு மழையில் பள்ளிக்குச் செல்வது கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து விடுமுறை கொடுங்கள்” என்று உருக்கமாகக் கேட்டுள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் சிலர், “மழையைவிட கணிதத் தேர்வுதான் மாணவர்களை அதிகம் பயமுறுத்துகிறது போல!” என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, “நீங்களும் முதலில் ஒரு மாணவராக இருந்திருப்பீர்கள் அல்லவா சார்? மழையில் பள்ளிக்குச் செல்வது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கும் தெரியும். எங்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு உதவி செய்யுங்கள்” என்ற தொனியிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
