ஈரானில் 24 மணி நேரத்தில் 200+ இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தகவல்

0
108

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த 14 நாட்களாக இரு தரப்பும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட தகவல்: கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேலிய விமானப் படை தாக்கி உள்ளது. புலனாய்வு இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் கீழ், டஜன் கணக்கான விமானப்படை போர் விமானங்கள் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் விரிவான தா்குதல்களை நடத்தி முடித்துள்ளன.

பாலிஸ்டிக் ஏவுகணைகள், பாதுகாப்பு அமைப்புகள், ஆயுத உற்பத்தித் தளங்கள் உட்பட ஈரானிய ஆட்சியின் 200க்கும் மேற்பட்ட இலக்குகளில் ஏராளமான குண்டுகள் வீசப்பட்டன.

தெஹ்ரான், ஷிராஸ், அஹ்வாஸில் உள்ள ஈரானிய உள்கட்டமைப்புகளுக்கு எதிராக தொடர் அலைகளைப் போல தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஈரானின் ஷிராஸில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரித்து சேமிக்க ஈரானிய ஆட்சியால் பயன்படுத்தப்பட்ட ஒரு தளம் தாக்கப்பட்டது.

அதேபோல், தெஹ்ரானில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பின் தளங்கள் தாக்கப்பட்டன. பல்வேறு ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல தளங்கள் தாக்கப்பட்டன.

மேலும், மேற்கு ஈரானின் அஹ்வாஸில் உள்ள ஈரான் ஆட்சி அமைப்புகளின் பல்வேறு தலைமையகங்கள் தாக்கப்பட்டன. ஈரான் ஆட்சியின் முக்கிய கட்டமைப்புகள் மற்றும் அதன் அடிப்படைகளுக்கு ஆழமான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக இந்த தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், லெபனானின் பெய்ரூட், பெக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக டஜன் கணக்கான அலை அலையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சுமார் 10 ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேலிய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளது என்று இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here