ஆந்திர மாநிலம் முழுவதும் காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதை முன்னிட்டு அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா முன்தினம் இரவே விஜயவாடா சென்று, ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.
நேற்று காலை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உண்டவல்லியில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அமராவதி பாலம் மீது செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீஸார் முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் ஷர்மிளா உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் துர்கராலா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஷர்மிளா மற்றும் சிலரை மங்களகிரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, சிறிது நேரத்திற்கு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
அப்போது ஷர்மிளா செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் ஜெகன் தவறான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி கொடுத்து முதல்வரானார். இப்போது சுமார் நாலரை ஆண்டுகள் ஆகியும் பலவற்றை அவர் நிறைவேற்றவே இல்லை. இவர் எப்படிதான் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாரிசு என கூறிக்கொள்கிறார் என தெரியவில்லை. அரசுத் துறைகளில் உள்ள காலி பணி இடங்களை நிரப்பும் வரை எனது போராட்டம் ஓயாது” என்று கூறினார்.