“மெஸ்ஸிக்காகவா இந்த உலகக் கோப்பை?” – எகிப்து அணி மேலாளர் ஆவேசம் | FIFA WC 2026

0
21

அர்ஜெண்டினா – எகிப்து உலகக் கோப்பை ஆட்டம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக எகிப்துக்கு மறுக்கப்பட்ட அந்த கோல் மற்றும் வி.ஏ.ஆர். சதி போன்றவற்றினால் எகிப்து மேலாளர் ஹொசாம் ஹசன் ஆவேசமாகப் பேசியுள்ளார். ‘அவர்களுக்கு, மெஸ்ஸி தொடரில் நீடிக்க வேண்டும்’ என்று போட்டி அமைப்பையே சாடினார்.

உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினாவிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, ‘இனி இந்த உலகக் கோப்பையை ஒரு நிமிடம்கூட பார்க்கமாட்டேன்’ என்று எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் கடும் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளார்.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா, இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து அதிரடியான முறையில் மீண்டு வந்து வெற்றி பெற்றது.

போட்டியின் தொடக்கத்திலேயே யாசர் இப்ராஹிம் எகிப்துக்காக முதல் கோலை அடித்தார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் முஸ்தஃபா சிகோ மற்றொரு கோல் அடித்ததாகத் தோன்றியது. ஆனால், அதற்கு முன் மர்வான் அத்தியா தவறு செய்ததாகக் கூறி அந்த கோலை நடுவர் நிராகரித்தார். அதன்பிறகு சிகோ மீண்டும் கோல் அடித்து எகிப்தை 2-0 என்ற முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. கிறிஸ்தியன் ரோமேரோ ஒரு கோல் அடித்தார். பின்னர் மெஸ்ஸி சமநிலை கோல் அடித்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை எட்டாகவும், உலகக் கோப்பை வரலாற்றில் மொத்த கோல்கள் 21 ஆகவும் உயர்ந்தது.

வெற்றி கோலை என்சோ பெர்னாண்டஸ் அடிக்கும் முன் எகிப்து வீரரை அவர் ஃபவுல் செய்தது கண்கூடு. இருந்தும் பிரெஞ்சு நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியர் ஃபவுல் வழங்கவில்லை என்று எகிப்து அணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. போட்டிக்கு முன்பே லெடெக்சியரை நடுவராக நியமித்ததை எதிர்த்து புகார் அளித்திருந்ததாக ஹசன் கூறினார்.

போட்டிக்குப் பிறகு ஆவேசமாக பேசிய ஹசன், “இது எல்லாம் பணத்துக்காக. மெஸ்ஸி தொடரில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். கால்பந்தில் மைதானத்திற்கு வெளியேயும் பல விஷயங்கள் நடக்கின்றன. இன்று நடந்தது நியாயமற்றது. தகுதி பெற வேண்டியது எகிப்துதான். சிறப்பாக விளையாடியது நாங்கள்தான்,” என்றார்.

மேலும், “விளையாட்டில் ஏன் சம நீதி இல்லை? அழகான வார்த்தைகளால் இதை மென்மையாகச் சொல்ல விரும்பவில்லை. இன்று எங்களுக்கு அநீதி நடந்துள்ளது. இனி இந்தத் தொடரில் ஒரு போட்டியையும் நான் பார்க்கமாட்டேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

எகிப்து வீரர் முஸ்தஃபா ஜீகோவும், நடுவர்கள்அர்ஜென்டினாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

“நாங்கள் 2-0 என முன்னிலை பெற்ற பிறகு எல்லாமே எங்களுக்கு எதிராக மாறிவிட்டது. எனது இரண்டாவது கோல் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது இன்னும் புரியவில்லை,” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here