கட்டாய ஓய்வுக்கு சிராஜும் தள்ளப்படுகிறாரா? – நீக்கம் குறித்து எழும் விமர்சனங்கள்

0
27

டெஸ்ட் முகாமுக்கும் அனுப்பப்படவில்லை, ஒருநாள் போட்டிகளிலும் சீரான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஒருநாள் அணியில் இருந்தும் லெவனில் இருப்பதில்லை என்று மேட்ச் வின்னர், ஃபைட்டர் முகமது சிராஜை ஓரங்கட்டும் கம்பீர் அண்ட் கம்பெனி நிச்சயம் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓரங்கட்டும் என்று யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவர் நீக்கம் என்ற செய்தி வந்தவுடனேயே சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கம்பீரையும், ஷுப்மன் கில்லையும் அணி நிர்வாகத்தையும் நியாயமாகவே வசைபாடத் தொடங்கி விட்டனர். வேறு சிலருக்கு ரவீந்திர ஜடேஜா நீக்கமும் பேரதிர்ச்சியே. என்ன நடந்து கொண்டிருக்கிறது? முகமது ஷமியை வெறுப்படையச் செய்து ஓய்வு பெற வைத்தது போல் சிராஜுக்கும் நடக்கிறதா என்ற கேள்வி நிச்சயம் எழவே செய்கிறது, எழுந்து கொண்டும் இருக்கிறது.

பும்ராவை தவிர வேறு எந்த பவுலரும் பிரசித், ஆகாஷ், காம்போஜ் நன்றாக வீசவில்லை, இத்தனைக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக கீரீன் டாப் பிட்ச் இது. பும்ராவுக்கு உறுதுணையாக சிராஜ், ஷமி இருந்திருந்தால் 70/5 என்று ஆகியிருந்த நியூசிலாந்து நிச்சயம் இந்தப் பிட்சில் 100 ரன்களுக்குச் சுருண்டிருக்கும். ஆனால் அது மீண்டெழுந்து வருகிறது.

அதற்குப் பதில் எடுத்த பவுலர் பிரசித் கிருஷ்ணாவாகட்டும் ஆகாஷ் தீப் ஆகட்டும் இருவருமே காயத்திலிருந்து வெளியே வந்து போராடிக் கொண்டிருப்பவர்கள், இவர்களுக்கு நியூஸிலாந்தில் வீசி அனுபவம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இன்னொருவர் அன்ஷுல் காம்போஜ், இவர் உயரமானவரும் இல்லை, வேகப்பந்து வீச்சுக்குரிய கட்டுமஸ்தான உடலும் இல்லை. முதல் நாள் ஆட்டத்தில் படுமோசமாக வீசினார் என்றே கூற வேண்டும்.

அன்ஷுல் காம்போஜின் வேகம் 130-ஐ தாண்டுவதற்கு அவர் முக்கித் திக்கித் திணற வேண்டியிருப்பதையே பார்த்தோம், டெவன் கான்வே விக்கெட் ஒரு பிறழ்வு என்றுதான் கூற வேண்டும். ஏதோ டெவன் கான்வேயை பும்ரா போட்டு குழப்பி விட்டதில் காம்போஜ் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினாரே தவிர மற்றபடி இந்த கிரீன் டாப் பிட்சிலும் காம்போஜ் பவுலிங்கில் ஒன்றுமே இல்லை. பேட்டர்களுக்கு பூப்பந்து போட்டு அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார் காம்போஜ்.

மேலும் பல சமயங்களில் ரன் அப் மிகவும் ஸ்லோ, கிரீசிற்கு அருகில் வந்து மொஹீந்தர் அமர்நாத் போல் மெதுவாகி விடுகிறார். இதோடு அந்தக் கடைசி நேர வேகமான கைசுற்றுதல் இல்லாமல் தொய்வாக இருக்கிறது. மொத்தத்தில் அன்ஷுல் காம்போஜ் டி20 கிரிக்கெட்டில் வீசும் 4 ஓவர் பவுலர் அவ்வளவே. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் 4-5 ஒவர்களுக்கும் மேல் தொடர்ச்சியாக வீசுபவரில்லை, ரஞ்சி டிராபியே அதிகம் என்ற திறமையற்ற பவுலரை எந்த அடிப்படையில் டெஸ்ட் போட்டிக்கு அதுவும் திறமையான போராட்டக்காரர் சிராஜை உட்கார வைத்து, கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்கு நிச்சயம் பதில் இல்லைதான்.

70/5 என்ற நிலையிலிருந்து நியூஸிலாந்து மேலும் விக்கெட் இழக்காமல் வலுவாகச் சென்று கொண்டிருக்கிறது.

சுனில் கவாஸ்கர் சோனி தொலைக்காட்சியில் சிராஜ் உட்கார வைக்கப்பட்டது பற்றி காட்டமாகக் கூறுகையில், ‘அவர் ஒரு போதும் இந்திய அணியைக் கைவிட்டவர் அல்ல, நிச்சயம் இல்லை, பின் ஏன் டிராப்?’ என்று கேள்வி எழுப்பினார்.

இங்கிலாந்தில் சிராஜ் இந்திய அணிக்கு தனிநபராக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். எந்தப் போட்டியில் எடுத்தாலும் அவர் தன் பங்கைத் திறம்படச் செய்தவர்தான். இந்த கிரீன் டாப் பிட்சில் அவரை உட்கார வைத்து அவரைவிட திறமை குறைவான காம்போஜை எடுத்தது நிச்சயம் சிராஜ் மனதைச் சோர்வடையச் செய்திருக்கும்.

ஒரு வீரரை உற்சாகப்படுத்தி மென்மேலும் வளர்ப்பதற்குத்தான் பயிற்சியாளர் மற்றும் கேப்டன், அவர்களை வெறுப்பேற்றி அவர்களாகவே ஓய்வு பெறச் செய்வதற்கு அல்ல. கம்பீரின் இத்தகைய கோமாளித்தனங்களை யார்தான் கேள்வி கேட்டு முடிவுக்குக் கொண்டு வரப்போகிறார்களோ என்பது இப்போது இந்திய ரசிகர்களின் கோபாவேச ஏக்கமாகவே மாறியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here