இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 99% நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இரு தரப்புக்கும் இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் பிறகு நிரந்தர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் இரு நாடுகளும் அறிவித்தன.
இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. வரும் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான வர்த்தகப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய வர்த்தகத் துறை செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கூறுகையில், ‘‘இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தை இறுதி செய்யும் நிலைக்கு நெருங்கிவிட்டன. இது தொடர்பான 99% விவாதங்கள் ஏற்கெனவே முடிந்து விட்டன. சிறிய அளவிலான பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வருகிறது.
அமெரிக்காவுடனான முதலாவது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதை இந்தியா மிக விரைவில் அறிவிக்கும். மேலும், இந்த ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, இரண்டாம் கட்டத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்’’ என்றார். சந்தை அணுகல், வரி அல்லாத நடவடிக்கைகள், சுங்கம், வர்த்தக வசதி, முதலீட்டு ஊக்குவிப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ளன.
