நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் பாஜக உயர்நிலைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நவீன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.
எனினும், பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவும் சூழலில் இக்கூட்டம் நடந்துள்ளது. இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற வியூகம் குறித்து விவாதிக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 21-ல் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.
சோனியா, ராகுல்: மறுபுறம், சோனியா காந்தியின் ‘10, ஜன்பத்’ இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியும் வரும் திங்கட்கிழமை கூடித் தங்களின் கொள்கையை வகுக்கவுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகார், எரிபொருள் விலை உயர்வு மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையே, கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவது குறித்து விவாதிக்க மத்திய அரசு வரும் ஞாயிற்றுக் கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துணை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நேற்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆனால் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்படும். நாடாளுமன்ற அவைகளில் எங்களுக்கு மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதுதொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
