நாட்டின் 80-வது சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக டெல்லி செங்கோட்டை நேற்று முன்தினம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆய்வு துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதற்காக பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியுள்ளன.
டெல்லி செங்கோட்டை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக உள்ளதால் அது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதத்துக்கு முன்பாக செங்கோட்டை பொதுமக்களின் பார்வைக்கு மூடப்படுவது வழக்கம்.
அந்த விதிமுறைகள் படி அடுத்த மாதம் 15ம் தேதி வரை, பொது மக்களின் பார்வைக்கு செங்கோட்டை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசு வழங்கும் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
