பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவதற்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் டிடிபி அமைப்பின் முக்கிய தலைவரான முஃப்தி கஃப்ரான் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து டிடிபி அமைப்பினர் எல்லை தாண்டி வந்து எங்கள் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இது முற்றிலும் நிராகரிக்கத்தக்கது.
குற்றச்சாட்டுகள் தொடர்பான உறுதியான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இதுவரை வெளியிடவில்லை. எங்கள் அமைப்பின் ராணுவ மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. அங்குதான் இயங்கி வருகிறோம். எங்கள் அமைப்புக்கு பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 39 மாவட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதில் மிகக் குறைந்த அளவிலான அமைப்புகளே ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ளன.
பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் டிடிபி இயங்கி வருகிறது. இந்த இடங்கள் எல்லைப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. சமீபத்தில் ஹாங்கு பகுதியில் சண்டை நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அந்தப் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இல்லை.
மேலும், பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் முள்வேலித் தடுப்புகள், கண்காணிப்புச் சாவடிகள், எச்சிரிக்கை அமைப்புகள், விளக்குகள் மற்றும் நிலக்கண்ணி வெடிகளை அமைத்து பலப்படுத்தியுள்ள நிலையில், எங்களால் எப்படி தொடர்ந்து எல்லையைக் கடந்து வர முடியும்.
மேலும், இந்திய அரசு டிடிபி அமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் கூறிவரும் குற்றச்சாட்டுகளும் முற்றிலும் புறந்தள்ளக்கூடியது. எதிரிகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் காலம் காலமாகப் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்தக் குற்றச்சாட்டு. எங்கள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் சுயசார்பான நிதியுதவி மற்றும் திட்டமிடலின் மூலமே நடைபெறுகின்றன. இவ்வாறு முஃப்தி கஃப்ரான் கூறியுள்ளார்.














