சென்னை மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டிடத்தில் ஏசி-யில் இருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக் கட்டிடம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022-ம் ஆண்டு அக்.27-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த அலுவலகம், ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகளைக் கொண்டது. மேலும், இந்தக் கட்டிடம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏசியில் இருந்து வெளியேறும் நீரை சேகரித்து மறுபயன்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், ஏசி-யில் இருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 1,750 டன் குளிரூட்டும் திறன் கொண்ட ஏசி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரித்து மறு பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.1.5 லட்சம் செலவில் ஆலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், தினசரி சராசரியாக 10,000 லிட்டர் நீர் பெறப்படும். இது மொத்த கட்டிட நீர் பயன்பாட்டின் சுமார் 25 சதவீதம் ஆகும். இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.6 லட்சம் நீர் கட்டணச் செலவில் சேமிப்பு ஏற்படும். இது நீரை பாதுகாக்கும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.