அண்ணாநகரில் மதுபான சுவைகளில் ஐஸ்கிரீம் விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை மேற்கு அண்ணா நகர் வெல்கம் காலனி பகுதியில் பிரபல ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது இந்தக் கடையில் ஒயின், வோட்கா, விஸ்கி, ரம் போன்ற உலகத் தரம் வாய்ந்த மதுபானங்களின் சுவைகளில் (Flavors) ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இது இளம்பருவத்தினரை மதுப்பழக்கத்துக்கு தூண்டும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அந்தக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புகாரின் பேரில் கடையில் சோதனை நடத்தியதில், நேரடியாக ஆல்கஹால் (மதுபானம்) கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும், மது பாட்டில்களும் சிக்கவில்லை.
மதுபானத்தின் சுவை, மணம் வரவழைப்பதற்காக ‘எசன்ஸ்’ மற்றும் பிளேவர் திரவங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இதில் ரசாயனங்கள் ஏதேனும் அச்சுறுத்தலாக உள்ளதா என்பதை அறிய 2 ஐஸ்கிரீம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வந்ததும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.















