“உங்கள் அரசின் திட்டங்களை பின்பற்றுகிறேன்” – பிரதமர் மோடி முன்னிலையில் இந்தோனேசிய அதிபர் பேச்சு

0
20

பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேசியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய விருந்தளித்தார். பிரதமர் மோடி முன்னிலையில் விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரபோவோ சுபியாண்டோ, “நான் உங்கள் பணிகளை உன்னிப்பாக கவனிக்கிறேன். உங்களது பல திட்டங்களை நான் இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தி உள்ளேன். இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அதிக மக்கள் தொகை, விவசாயம் சார்ந்த பொருளாதாரம், அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்கள் என இந்தியாவுக்கு இருக்கும் அதே சவால்கள் இந்தோனேசியாவுக்கும் இருக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு உங்கள் திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்திருக்கும்போது அதில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனவே, உங்கள் பணிகளை நான் உன்னிப்பாக கவனிக்கிறேன் என்பதையும், உங்கள் பல திட்டங்களை நான் பின்பற்றியுள்ளேன் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு இந்தியாவை பின்பற்றி கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் எங்களுக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளன. அதற்காக உங்களுக்கு நன்றி. உங்கள் திட்டங்களுக்கு காப்புரிமை ஏதும் இல்லை என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது. நிலையான வேளாண்மை முறையைப் பயன்படுத்தி, வறண்ட நிலங்கள் எவ்வாறு வெற்றிகரமாக விளைநிலங்களாக மாற்றப்பட்டன என்பதை ஆய்வு செய்ய இந்தோனேசியாவில் இருந்து ஒரு குழு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இந்தியாவில் தங்கி ஆய்வு செய்துவிட்டு திரும்பியுள்ளது. நாங்கள் இதை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறோம். எங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதோடு, கற்றுக்கொள்வதற்கு நாங்கள் அஞ்சுவதில்லை” என்றும் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here