‘லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பல் குறியில் அமிதாப், அமீர், கங்கணா!’ – மும்பை காவல்துறை வட்டாரம் தகவல்

0
17

நடிகர் டைகர் ஷெராப்பைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், அமீர் கான், கங்கணா ரனாவத், அக்‌ஷய் குமார் ஆகியோரும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் குறியில் இருப்பதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

மும்பை காவல்துறை வட்டாரங்களின்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முதலில் சல்மான்கானைத் தான் குறிவைத்தது. ஆனால், அந்த தாக்குதல் திட்டம் தோல்வியடைந்ததால், தாக்குதல் நடத்துபவர்களுக்கு எளிதான வேறொரு இலக்கைத் தேடுமாறு உத்தரவிடப்பட்டது.

பாலிவுட்டில் பாதுகாப்பு குறைவாக உள்ள எந்தவொரு நட்சத்திரத்தையும் உடனடியாகக் குறிவைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மும்பைக்குச் சுற்றுலா வந்ததாகக் கூறிக்கொண்ட லாரன்ஸின் கும்பலைச் சேர்ந்தவர்கள், அமிதாப் பச்சன், அமீர் கான், கங்கணா ரனாவத், அக்ஷய் குமார் போன்ற பிரபலங்களின் வீடுகளைக் கண்காணித்தனர்.

அதன் பின்னரே நடிகர் டைகர் ஷெராப் இலக்கு வைக்கப்பட்டார். அந்தச் சமயத்தில், டைகர் ஷெராப் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கால்பந்து விளையாடுவதற்காக ஜூஹு பகுதிக்கு வரும் தகவல் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மூலம் கிடைத்துள்ளது.

அதன் பிறகு, அக்டோபர் 11 இல் ஜூஹு மைதானம் கண்காணிக்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 18 இல் நடிகர் டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷெராப் வழக்கில் கைதானவர்கள் சுமார் 20 நாட்களுக்கு முன்பே மும்பைக்கு வந்துள்ளனர். அவர்கள் சாதாரண ரசிகர்களைப் போல வேடமிட்டு கண்காணித்துள்ளனர்.

மும்பையைச் சுற்றிப் பார்ப்பது போலவும், பிரபலங்களின் வீடுகளுக்கு வெளியே புகைப்படம் எடுப்பது போலவும் நடித்துக்கொண்டு பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தனர். இதற்காக அவர்கள் ஆட்டோக்களையும், பைக் சேவையையும் பயன்படுத்தி உள்ளனர்.

இந்தக் காலக்கட்டத்தில், அமிதாப் பச்சன், அமீர் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் வீடுகளையும் அவர்கள் கண்காணித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சூழல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பை காவல்துறை முன்பே பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களுக்கு சிறப்பு பாதுகாப்புகளை அளித்துள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலருக்கு மும்பை காவல்துறை பொதுவான பாதுகாப்பை வழங்கி வருகிறது.

மாநில அளவிலான குழு ஒன்று, திரைத்துறை பிரபலங்களின் பாதுகாப்பு அபாய நிலையை அவ்வப்போது மதிப்பீடு செய்கிறது. அதன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்கவோ, குறைக்கவோ அல்லது நீக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

இதில், சல்மா கானுக்கு ‘ஒய் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் எப்போதும் மும்பை காவல்துறையைச் சேர்ந்த 11 முதல் 12 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். இதில் ஆயுதம் ஏந்திய நான்கு கமாண்டோக்களும், நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்ற ஒரு சிறப்பு காவலரும் அடங்குவர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்மானுக்கு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர அரசு அவருக்கு இந்த பாதுகாப்பை வழங்கியது. பாபா சித்திக்கின் படுகொலைக்குப் பிறகு, அக்டோபர் 2024 இல் இந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

ஷாருக் கானுக்கும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘ஒய் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பட்டான்’ இல் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடலினால் கொலை மிரட்டல்கள் வந்தன.

கங்கணா ரனாவத்திற்கு செப்டம்பர் 2020 இல் மத்திய அரசு ‘ஒய் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியது. அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசியதால், மகாராஷ்டிர அரசு மற்றும் சிவசேனா தலைவர்களிடையே கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்குத் திரும்ப வேண்டாம் என்று சிவசேனாவின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். அமிதாப் பச்சனுக்கு அரசு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு உள்ளது. இதில் சுழற்சி முறையில் பணியாற்றும் இரு பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆவார்.

அமிதாப்பைப் போலவே நடிகர் அக்‌ஷய் குமாருக்கும் ’எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு உள்ளது. அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில், அவரவருக்கு உள்ளூர் காவல்துறை மூலமாகவோ அல்லது தனியார் பாதுகாப்பு மூலமாகவோ பிரத்யேக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த பாதுகாப்பிற்கானச் செலவுகளை பெரும்பாலான நடிகர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு காலத்தில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமைப் போல், பாலிவூட்டை லாரன்ஸும் தனது பிடியில் வைத்திருக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here