Home உலக செய்திகள் “உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது” – ட்ரம்ப் ஆவேசம்

“உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது” – ட்ரம்ப் ஆவேசம்

0

“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். ஈரான் அரசுக்கு எதிரான தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார். 

ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “இந்த நடவடிக்கை மக்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். 

மேலும், தாக்குதலுக்கான இறுதி முடிவை எடுப்பதற்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தபோது அதை ஒத்திவைத்ததாகக் குறிப்பிட்ட அவர், வரும் நாட்களில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் வெள்ளிக்கிழமை அல்லது வார இறுதியில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில், ஈரானின் புதிய அமைதித் திட்டத்தை ஆய்வு செய்யவே இந்தத் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் முழு அளவிலான மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைத் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக உள்ளது. போர்நிறுத்த காலத்திலும் ஹார்முஸ் ஜலசந்தியில் நீடிக்கும் போக்குவரத்து முடக்கத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், லெபனான் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது மற்றும் போர்க்காலச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற ஈரானின் தற்போதைய 14 அம்சக் கடுமையான நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா என்பதில் வல்லுநர்களிடையே பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version