ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாத பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர். போர் தொடர்ந்ததால் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறவில்லை.
தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள சூழலில், தலைநகர் டெஹ்ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. அவர்களின் உடல் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வரும் 9-ம் தேதி மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
டெஹ்ரானில் இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கமேனி உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்வில் அதிபர் பெசஷ்கியான் உள்ளிட்ட ஈரானின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகிய இருவரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, பிஹார் ஆளுநர் சையது அதா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்றனர்.
