ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்ய நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்ட மொசாட் அதனை எந்தவித பிசகலும் இல்லாமல் ஈரானில் செய்து முடித்தது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இஸ்மாயில் ஹனியா கொல்லப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தனது பாலஸ்தீன எதிரியை பற்பசையின் மூலமாக தீர்த்துக் கட்டியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 1976-ம் ஆண்டு ஏர்பிரான்ஸ் விமானத்தை கடத்தியதற்கு மூளையாக செயல்பட்டவர் வாதி ஹடாத். இவர் அப்போது பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் (பிஎப்எல்பி) தலைவராக செயல்பட்டு வந்தவர்.இந்த விமான கடத்தல் சம்பவத்துக்கு பழிவாங்க விரும்பிய இஸ்ரேல் உளவுத் துறை நிறுவனமான மொசாட், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று அதன் கொலைப்பட்டியலில் வாதி ஹடாத்தை முதல்இடத்தில் சேர்த்தது. இதையடுத்து, மொசாட் தனது சதித் திட்டத்தை அமைதியான முறையில் செயல்படுத்த தொடங்கியது.
ஹடாத்தின் வீடு மற்றும் அலுவலகத்தை அணுகக்கூடிய ஒருவரை மொசாட் தனது வலையில் வீழ்த்தி அவருக்கு ‘ஏஜென்ட் சாட்னஸ்’ என பெயரிட்டு ஹடாத்தை காலி செய்யும் பணியில் இறங்கியது.
அந்த ஏஜென்டும் 1978-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி அன்று, ஹடாத்தின் வழக்கமான பற்பசைக்கு பதிலாக மொசாட் அனுப்பிய விஷம் தடவிய பற்பசையை அவர் பயன்படுத்தும் இடத்தில் வைத்துவிட்டார். இந்தபற்பசை இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. நச்சு கலந்த சளி சவ்வுகளில் ஊடுருவி படிப்படியாக அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் பற்பசையாகும் அது.
இதனை பயன்படுத்திய ஹடாத் அடுத்த சில நாட்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு, தீவிரமான வயிற்றுப்போக்கு, பசியின்மை, விரைவாக 25 பவுண்டுகளுக்கு மேல் எடைகுறைவு ஏற்பட்டது. ஈராக் மருத்துவர்கள் உயர்ரக சிகிச்சை அளித்தபோதிலும் பலன் இல்லை. இறுதியாக கிழக்கு பெர்லினுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஹடாத். இருப்பினும்,நோய்க்கான காரணத்தை அவர்களால் கண்டறியமுடியவில்லை. இதனால், 1978 மார்ச் 29-ல் ஹடாத்உயிரிழந்தார். ஹடாத்தின் படுகொலை பற்றிய உண்மை வெளிவர மூன்று தசாப்தங்கள் ஆனது.