“இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு

0
21

இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

இந்தச் சூழலில் தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் டிடிவி தினகரன்., தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ள தங்கள் கட்சியின் எம்எல்ஏவான காமராஜ், அதிமுகவை ஆதரிப்பதாக ஆளுநர் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.

பின்னர், தங்கள் கட்சியின் எம்எல்ஏ-வை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரைக் காணவில்லை என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்தார் அமமுக எம்எல்ஏ காமராஜ். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார்.

அப்போது பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், “நான் புதுச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத போன். அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து காமராஜ் தனது கைப்பட கடிதம் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here