பெண்கள் பாதுகாப்புக்கான உதவி மைய எண் மற்றும் எழுத்து வடிவில்: 5,050 பெண் போலீஸார் திரண்டு உலக சாதனை

0
258

பெண்கள் பாதுகாப்புக்கான உதவி மைய எண்கள் மற்றும் எழுத்து வடிவில் 5,050 பெண் போலீஸார் ஒரே நேரத்தில் திரண்டு உலக சாதனை படைத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக சாதனை மேற்கொள்ளவும் சென்னை போலீஸார் முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று மாலை சென்னை காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான 5,050 பெண் போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கூடினர்.

பின்னர், அவர்கள் பெண்கள் உதவி மைய எண் 1091, 181, குழந்தைகள் உதவி மைய எண் 1098 ஆகிய எண்களின் வடிவத்திலும், நிர்பயா பெண்கள் பாதுகாப்பு திட்டமான அவள் (AVAL) மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றின் எழுத்துகள் வடிவிலும் நின்று பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு வடிவமைப்பை உருவாக்கினர்.

ஒரே நேரத்தில் 5,050 பெண் போலீஸார் ஒன்று கூடி விழிப்புணர்வு எண் வடிவத்தை மேற்கொண்ட இந்த நிகழ்ச்சியை ‘வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்’ அமைப்பு உலக சாதனையாக அறிவித்தது. மேலும், அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஷெரிபா, உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினார்.

முன்னதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், “இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை பெருநகரம் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள போலீஸாரில் 26 சதவீதம் பேர் பெண்கள். இது பெருமையான விஷயம். தற்போது படைக்கப்பட்டுள்ள உலக சாதனை சென்னை போலீஸாருக்கு மட்டும் அல்ல, தமிழக போலீஸாருக்கே பெருமை” என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வால், கூடுதல் காவல் ஆணையர்கள் கபில்குமார் சி.சரத்கர், ஆர்.சுதாகர், பி.கே.செந்தில் குமாரி, இணை ஆணையர் கயல்விழி, துணை ஆணையர்கள் நிஷா, கீதாஞ்சலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here