டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நவ.15 வரை கனமழை

0
267

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம் – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 13-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

14, 15-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, குமரி மாவட்டம் குருந்தன்கோடு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here