அரசு மருத்துவமனைகளில் 2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப ஜன.5-ம் தேதி தேர்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

0
26

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜன.5-ம் தேதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை வரும் ஜன.5-ம் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 23,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முடிந்த பிறகு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.

பல்வேறு வழக்கு காரணமாக பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 296 உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாகவும், 110 இணை பேராசிரியர்கள், துறை சார்ந்த பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல், இணை இயக்குநர்களாக இருந்த நான்கு பேருக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை குடிமை மருத்துவரிலிருந்து 18 பேர் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, 428 பேருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 1,200 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் பணியாற்றிய மீதமுள்ள 940 பேருக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களும் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். அதன்படி, 2,140 பேருக்கான பணிநியமன ஆணைகள் வரும் டிச.2-ம் தேதி வழங்கப்படவுள்ளது. சுகாதார ஆய்வாளர்கள் 1,066 பணியிடங்கள், 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் உள்ளது. பிசியோதெரபியில் 47 இடங்களுக்கு 8,772 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த ஆண்டுகளில் மழைநீர் தேங்கிய மருத்துவமனைகளில் முன்னெற்பாடு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here