ஆர்எஸ்எஸ் சார்பில் ‘கூடுவோம் கூட்டுவோம்’ நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் பல்வேறு துணை அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து பங்கேற்கும் வகையில் ‘கூடுவோம் கூட்டுவோம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘கூடுவோம் கூட்டுவோம்’ நிகழ்ச்சி நாடு முழுவதும் நாளை (டிச.1) நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வார்டு வாரியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். போதை ஒழிப்பு, சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்வியல், குடிமகனின் கடமை உள்ளிட்ட தலைப்புகளில் பலரும் பேசுகின்றனர். இவற்றை தங்கள் குடும்பங்களிலும் கடைபிடிப்பதாக உறுதிமொழியும் எடுக்கின்றனர்.