முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
23

கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கான முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல நூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதல்வர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

இந்த 2024-ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2021, 2022, 2023 ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் ‘www.tamilvalarchithurai.tn.gov.in’ என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிச.31-க்குள் அனுப்ப வேண்டும். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 – 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள்பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here