‘2027 ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தயார் ஆகி வருகிறது’ – மெக்கல்லம் சூசகம்

0
27

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் படு மோசமாகத் தோற்று அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக மீண்டெழுந்து ஆஸ்திரேலிய மண்ணில் ஓர் அரிய ஒருநாள் தொடர் வெற்றியைச் சாதித்ததையடுத்து இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் 2027 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல இங்கிலாந்தும் முழுமூச்சுடன் தயாராகி வருகிறது என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2021 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு 16 முதல் 18 திறமையான வீரர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பையை சர்ச்சைக்குரிய விதத்தில் பவுண்டரிகள் கணக்கில் வென்ற பிறகே இங்கிலாந்து ஒன்றும் பெரிதாக ஒருநாள் போட்டிகளில் வெற்றி காணவில்லை, ஒரு சமயத்தில் 2027 உலகக்கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிச் சுற்றில் ஆடித் தகுதி பெற வேண்டிய நிலையே இருந்தது. அதன் பிறகு தகுதிக்கான சிலபல ஐசிசி விதிமாற்றங்களினால் இப்போது பிழைத்து விட்டது.

ஆனால் பிரெண்டன் மெக்கல்லம்-பென்ஸ்டோக்ஸ் கூட்டணியை விட மெக்கல்லம்-ஹாரி புரூக் கூட்டணி நன்றாகச் செயல்படுகிறது. இந்திய அணியை சமீபத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் வீழ்த்தியது , இப்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இடையில் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் மட்டும் சொதப்பியது. 2021-க்குப் பிறகே இங்கிலாந்து இந்த ஆண்டை ஒருநாள் போட்டிகளில் கொஞ்சம் நன்றாகவே முடிக்கவிருக்கிறது. அதாவது இந்த காலண்டர் வருடத்தில் 9 வெற்றிகள் 7 தோல்விகள் என்று நல்ல நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற 4 இருதரப்பு ஒருநாள் தொடர்களிலும் இங்கிலாந்து வென்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா தவிர இலங்கையை இருமுறை வீழ்த்தியது. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா தொடரில் முக்கிய வீரர்களான ஜேக்கப் பெத்தெல், ஜாஷ் டங், ஜாஸ் பட்லர் ஆகியோர் காயம் காரணமாக ஆடவில்லை.

அதே சமயம், முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ஜேமி ஓவர்டன் தனது இடத்தை சோனி பேக்கரிடம் இழந்தார். மேலும், ஸ்பின்னர் ஆதில் ரஷீத் போட்டி முழுவதும் குளிர்பானங்களைச் சுமந்தார். இதன் விளைவாக, இங்கிலாந்து அணி தங்களது முதல் பதினொரு பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பதற்கு மட்டுமல்லாமல், 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியிலேயே இடம்பிடிப்பதற்கும் உண்மையான போட்டியை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மெக்கல்லம் கூறும்போது, “உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுப்பதற்கு, எங்களுக்குத் தேவைப்படக்கூடிய 16 முதல் 18 வீரர்கள் யார் என்பது குறித்த தெளிவான புரிதல் எங்களிடம் உள்ளது,தற்போதைய நிலையில், அந்த 15 பேர் கொண்ட அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறக்கூடும் என்பது குறித்து, நாங்கள் 16 முதல் 18 வீரர்களை ஓரளவுக்கு உறுதியாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளோம்.” என்றார்.

இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காகவும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராகத் தங்கள் சொந்த மண்ணில் விளையாடவுள்ள ஐந்து ஒருநாள் போட்டிகளுக்காகவும், முழு பலம் கொண்ட அணியைத் தேர்வு செய்யவுள்ளது.

உலகக்கோப்பை 2027க்கான இங்கிலாந்தின் உத்தேச 16-18 வீரர்கள் பட்டியல்

பென் டக்கெட், டாம் பேன்டன், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோர்டான் காக்ஸ், சாம் கரன், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், ஜேக்கப் பெத்தல், ஜோஸ் பட்லர், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஜோஷ் டங், பிரைடன் கார்ஸ், ரேஹான் அகமது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here