ரூ.10,000 நிலுவை சம்பளத்தை வழங்காத ஆத்திரத்தில், தனது முதலாளிக்கு பாடம் புகட்ட நினைத்த கணக்காளர் ஒருவர் செய்த செயல் ஒட்டுமொத்த ஜவுளிச் சந்தைக்கே ரூ.24 கோடி இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குஜராத்தின் சூரத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஷியாம் சங்கினி ஜவுளி மார்க்கெட்டில் கடந்த 8-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 கடைகளில் ரூ.24 கோடி மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக சாரோலி பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ‘விஸ்வாஸ் புராஜெக்ட் பேஸ்-2’ திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த பல கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், ஒரு கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப் பார்சல்களுக்கு முகத்தை துணியால் மூடிய ஒருவர் தீ வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. முகத்தை மூடி தீ வைத்தது டிண்டோலி பகுதியில் உள்ள பிலிபத்ரா ரெசிடென்சியைச் சேர்ந்த வினோத் பண்டிட் சாவ்லே என போலீஸார் அடையாளம் கண்டனர். அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: வினோத் சாவ்லே கடந்த ஏப்ரல் முதல் மூன்று மாதங்கள் ஒரு ஜவுளி கடையி்ல் கணக்காளராக பணியாற்றியுள்ளார். கணக்கு பணிகளைச் சரியாக கையாள முடியாததால் ஜூன் மாதம் அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், தனது முதலாளி தனக்கு ரூ.10,000 சம்பள பாக்கி தரமால் இழுத்தடித்ததால், ஆத்திரம் அடைந்த சாவ்லே, கடை உரிமையாளருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக, சாவ்லே அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் சுமார் ரூ.150-க்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, செப். 8-ம் தேதி சந்தைக்குள் நள்ளிரவில் நுழைந்து, அவர் குறிவைத்த கடைக்குச் சென்று பையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எடுத்து, கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த
துணிப் பெட்டிகள் மற்றும் பார்சல்கள் மீது ஊற்றியுள்ளார். பின்னர், தீக்குச்சியைப் பயன்படுத்தி அவற்றுக்கு தீ வைத்தார். தீ வேகமாகப் பரவி பல கடைகளைச் சூழ்ந்தது. இந்த சம்பவத்தில், ஒட்டுமொத்த ஜவுளிச் சந்தைக்கே ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.














