ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

0
7

மலேசியாவில் தலைமறைவாக இருக்கும் ஜாகிர் நாயக்கின் ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்’ மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கம், தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய பேச்சாளராக அறியப்பட்டு பிரபலமானவர் மகாராஷ்டிராவின் ஜாகிர் அப்துல் கரீம் நாயக் (எ) டாக்டர்.ஜாகிர் நாயக். இவர் கடந்த பிப்ரவரி 1991-ல் ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்)’ எனும் அமைப்பை மும்பையில் நிறுவினார்.

ஐஆர்எப்-ன் செயல்பாடுகள் மற்றும் அதன் நிறுவனர் ஜாகிர் நாயக்கின் உரைகள் மீது சர்ச்சைகள் கிளம்பின. இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியது. பின்னர் நாயக் இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவிற்குச் சென்று தலைமறைவாக வசிக்கத் துவங்கினார். மலேசியாவில் அவருக்கு நிரந்தர வசிப்பிட உரிமை உள்ளது.

இந்த நிலையில், ஐஆர்எப், தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதாகவும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதனால், ஐஆர்எப் அமைப்பை நவம்பர் 17, 2016-ல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் தடை செய்தது. இதற்காக மத்திய அரசு, 1967-ம் ஆண்டின் உபா சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளது.

பிறகு 2021-ம் ஆண்டிலும் இந்த தடை தொடரப்பட்டது. இந்த தடைக்காலம் இன்றுடன் (நவம்பர் 14) முடிவடையவிருந்தது. இதனால், ஐஆர்எப் மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here