தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எவ்வித அசம்பாவிதம், மறு வாக்குப்பதிவும் இன்றி நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், விவிபாட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகள் அடங்கிய வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ‘ஸ்டிராங்’ அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்டிராங் அறைகளுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த துணை ராணுவப் படையினரில் ஒரு பிரிவினர் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீஸார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் மே 4-ம் தேதி 62 மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். அதன்பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆலோசனை
இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் எஸ்.சாய்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய்குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் வருகை
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஏற்கெனவே சிறப்பு தேர்தல் பார்வையாளர் மற்றும் தொகுதிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், காவல் துறை பார்வையாளர் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் என வெளி மாநில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட வரும் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர். 62 மையங்களிலும் பணியாற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், சென்னையில் 234 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இதில், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட 3 பேர் என 234 தொகுதிகளுக்கும் சேர்த்து ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
புதுச்சேரி தேர்தல் அலுவலர் ஞானவேல் அனைவருக்கும் பயிற்சி அளித்தார். இதில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது, சுற்றுவாரியாக முடிவுகளை வெளியிடுவது, ஆவணங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார். இதில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி வே.ஸ்ரீதர், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர்.மேனுவல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.















