சென்னையில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

0
16

 தமிழக பட்ஜெட்டில் சென்னைக்காக 1 லட்சம் புதிய வீடுகள் மற்றும் கூவம், அடையாறு நதிகள் சீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதன் பரப்பளவை 5,904 சதுர கி.மீ-ஆக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான முழுமைத் திட்டத்தைத்(மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் எளிதாகத் திட்ட அனுமதி பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழித் தளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த புதிய தளத்துக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்தாண்டு ரூ.1,253 கோடி மதிப்பில் 14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. மிக முக்கியமாக, ‘மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம்’ என்ற புதிய முன்னோடித் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். அந்தவகையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.8,852 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2031-ம் ஆண்டுக்குள் தமிழக நகரங்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், ‘முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.2,117 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடங்கள் (ஸ்மார்ட் பார்க்கிங்) அமைக்கப்பட உள்ளன. மேலும், அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டை சாலைகள் நவீன முறையில் மறுவடிவமைக்கப்படும்.

சென்னையின் அடையாளங்களாகக் கருதப்படும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மீட்டெடுக்க, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். ஆறுகளில் பொது மக்கள் படகு சவாரி செய்தல், கரைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்கள் என நதிக்கரையில் உடற்பயிற்சி மற்றும் தூய்மையான காற்றை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை முழுவதும் தடையற்ற மற்றும் சமமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ரூ.3,108 கோடி மதிப்பில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மிக அதிக அளவாக ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here