சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0
15

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’, 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க முன்வந்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் – தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் இடையே நேற்று கையெழுத்தானது.

பின்னர், முதல்வர் விஜய் பேசியபோது, ‘‘ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் தனது உலகளாவிய மையத்தை சென்னையில் அமைப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. உலகப் புகழ்பெற்ற இத்தகைய பெரிய நிறுவனம் தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது, நமது இளைஞர்களின் திறமைக்குக் கிடைத்த சான்று.

இதுபோன்ற உயர் நிறுவனங்கள் வருவதற்கு தமிழகம் ஒரு சிறந்த இடம் என்பதை இந்த முதலீடு நிரூபிக்கும்’’ என்றார். ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன் பேசும்போது, ‘‘இந்தியாவை மிகவும் முக்கியமான நாடாகக் கருதுகிறோம்.

சென்னையில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் பணியில் சேரும் நிறுவனங்களில் நீண்ட காலம் தொடர்கின்றனர். தவிர, தமிழகத்தில் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது. தமிழக அரசு சிறப்பான ஊக்கமும் தருகிறது.

இவை எல்லாம் புதிய தீர்வுகளைக் காணவும், வணிகத்தை வளர்க்கவும் உதவும்’’ என்றார். இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தலைமைச் செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் எஸ்.விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளி்ட்டோர் பங்கேற்றனர்.

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தனது உலகளாவிய திறன் மையத்தை அமைக்கிறது. இந்தியாவில் தனது சில்லறை வணிகக் கூட்டு நிறுவனமான டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்நிறுவனம் தனித்து இயங்க உள்ளது.

தமிழகத்தின் ஜிசிசி வளர்ச்சிப் பயணத்தில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இணைந்திருப்பது, உலகளாவிய தொழில்நுட்ப, வணிகச் சேவை மையமாக தமிழகம் உருவெடுத்து வருவதைக் காட்டுகிறது.

இந்த ஒப்பந்தம், ஜிசிசி துறையில் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழக அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும்.இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here