தமிழக வீரர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்க ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

0
26

ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு விழா, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமை வகித்து பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.

அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த வித்யா ராம்ராஜ், விஷால் டி.கே, ராஜேஷ் ரமேஷ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன், கமலினி, சமீனா ரியாஸ், வேலவன் செந்தில்குமார், ஜோஸ்னா சின்னப்பா, அபய் சிங், வாஷிங்டன் சுந்தர் மற்றும் செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, வைஷ்ணவி, குகேஷ், சவிதா உள்ளிட்ட 18 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகையை வழங்கினார்.

மேலும், போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற தடகளம், ஸ்குவாஷ், கிரிக்கெட், பேட்மிண்டன் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை உலக அரங்கில் மிளிரச் செய்யும் நோக்கில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ என்ற புதிய சிறப்புத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு தரமான பயிற்சி, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதிஉதவியும் வழங்கப்படும்.

முன்னதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க வேண்டுமென்றால், அவர்களை விளையாட்டை நோக்கி ஈர்க்க வேண்டியது அவசியம். இதற்காக உலகத்தரம் வாய்ந்த 46 விளையாட்டுகளை உள்ளடக்கிய ‘ஒலிம்பிக் சிட்டி’ மற்றும் மண்டல அளவிலான 4 ஒலிம்பிக் அகாடமிகளை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்ல நீண்டகால பயிற்சி அவசியம். இதை உணர்ந்து, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 8 வயது முதலே அதிவேகச் செயல்பாடுடைய குழந்தைகளை கண்டறிந்து விளையாட்டு விடுதிகளில் சேர்க்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டங்களின் மூலம், வரும் 2028 ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் நிச்சயம் ஒரு பதக்கத்தை வென்று சரித்திரம் படைக்கும்” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள், நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here