தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 130 – 160 இடங்கள் வரையில் வெல்லும் என்றும் பல்வேறு ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.
பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர், இந்த முறைபாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 2019 தேர்தல் பெற்ற இடங்களை பெறும் அல்லது அதைவிட கூடுதல்இடங்களில் பாஜக வெல்லும் என்று தெரிவித்து வந்தார்.
தற்போது வெளியாகி இருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளோடு பிரசாந்த் கிஷோரின் கணிப்பு ஒத்துப் போகிறது.
இந்நிலையில், பாஜக குறைவான இடங்களிலேயே வெல்லும் என்று கூறிவந்த ஊடகவியலாளர்கள், சமூக வலைதள இன்ப்ளூயன்சர்களை விமர்சிக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறும்போது, “இனி அரசியல், தேர்தல் பற்றி போலி ஊடகவியலாளர்கள், வாய்ச் சவடால் அரசியல்வாதிகள், சமூக வலைதளங்களில் தங்களைத் தாங்களே நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் பயனற்ற விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.