இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்களுக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 23, சஞ்சு சாம்சன் 1, ரிஷப் பந்த் 53, சூர்யகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 14, ஹர்திக் பாண்டியா 40, ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ரிஷப் பந்த்தை 3-வது வீரராக களமிறக்கி அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினோம். அதில் அவர் சிறப்பாக பிரகாசித்தார். எங்களது பேட்டிங் பிரிவை முழுமையாக இன்னும் பரிசோதிக்கவில்லை. இந்தப் போட்டியில் அனைத்து வீரர்களுமே சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதேபோல் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் அருமையாக இருந்தது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.