திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் திருமலையில் நேற்று நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 9 ஆயிரம் பேருக்கு ஊதியஉயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் – வன விலங்குகள் மோதலை குறைக்க நடைபாதையில் 7-வது மைல் பகுதியில் ‘நித்ய சங்கீர்த்தனார்ச்சனை’ எனும் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24-ம் தேதி திருப்பதி உருவான நாள் கடைப்பிடிக்கப்படும். ஏழுமலையான் கோயிலில் ‘ஜெயா – விஜயா’காவலர்கள் சிலை இருக்கும் இடத்தில் உள்ள பிரதான வாயிற்கதவுக்கு ரூ.1.69 கோடி செலவில்தங்க முலாம் பூசும் பணி தொடங்கப்படும். பத்மாவதி தாயார் கோயிலில் நவீன விளக்குகள் பொருத்தரூ. 3.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.4.12 கோடி செலவில் வாணி அறக்கட்டளை நிதியில்நிரந்தர யாகசாலை அமைக்கப்படும்.
கொழும்புவில் மயூரப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் அறங்காவலர் சுந்தரலிங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கு புதிய ஏழுமலையான் கோயில் கட்டப்படும். மேலும், அதேஇடத்தில் ஸ்ரீவாரி திருக்கல்யாணம் நடத்தப்படும். ரூ.3.72 கோடி செலவில் தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பகவத் கீதை புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்படும்.
திருப்பதி தேவஸ்தானம், ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள், அஹோபில மடம் மற்றும் திருமலை மடப்பள்ளி நிர்வாகத்தினரை இழிவாக பேசிசமூக வலைதளத்தில் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கவுரவ பிரதான அர்ச்சகரான ரமண தீட்சிதரை பணி நீக்கம் செய்யவும் இந்தஅறங்காவலர் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.