தமிழக – கர்நாடகா மாநில எல்லையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் கடந்த 7 முறை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 8-வது முறையாகவும் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆதலால், தற்போதைய முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, குப்பத்தில் தனது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமென ஆர்வமாக உள்ளார். அதற்காக குப்பம் தொகுதியில் உள்ள ராமகுப்பம் மண்டலம், ராஜுபேட்டையில் ரூ.560.29 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அனந்த வெங்கட்ரெட்டி ஹந்திரி – நீவா குடிநீர் திட்டத்தை மலர்கள் தூவி, பொத்தான் அழுத்தி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி சாந்திரபுரம் மண்டலம், குண்டு செட்டி பல்லி என்னும் இடத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:
குப்பம் தொகுதிக்கு வருவாய் வட்டம், நகராட்சி அந்தஸ்து, போலீஸ் சப்-டிவிஷன் போன்றவற்றை வழங்கியது இந்த ஜெகன் அரசுதான். மேலும், தற்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து சுமார் 672 கி.மீ. தூரம் வரை குடிநீர் கால்வாய் வெட்டி, அதன் மூலம் கிருஷ்ணா நதி நீரை குப்பம் வரை கொண்டு வந்து வழங்கியதும் அதே ஜெகன் அரசுதான்.
கடந்த 2022-ம் தேதி செப்டம்பரில் கொடுத்த வாக்குறுதியை நான் இப்போது நிறைவேற்றி உள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்திட்டம் மூலம் குப்பம் தொகுதியில் மட்டுமின்றி பலமனேர் தொகுதி விவசாயிகளும், மக்களும் பயனடைவர். இதன் மூலம் 6,300 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். 4.02 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும். இதுதவிர குப்பம் மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை போக்க ரூ. 535 கோடி செலவில் மேலும் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்களுக்கு நீர் பாசனம் அளிக்கும் வகையில் அடுத்த முறை வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும் இதே குப்பத்தில் 2 சிறு அணைகள் பாலாற்றில் கட்டப்படும். இதற்கான அடிக்கல்லும் தற்போது நாட்டப்பட்டுள்ளது.
இது தவிர பாலாற்றில் ரூ. 215 கோடி செலவில் 0.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஒரு சிறிய அணையும் கட்டப்படும். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும். ஆக மொத்தம் இங்கு 3 அணைகள் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.