திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் விலவூர் கோணம் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பு பணி நடைபெற்ற போது ஏராளமான டெம்போக்களில் குளத்து மண் கடத்தப்பட்டதாக புகார் இருந்தது.
இந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளார். அதன்படி இந்த குளத்தில் மண் எடுக்க திருவட்டார் வட்டாட்சியர் அனுமதி அளித்ததன் பேரில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான டெம்போக்களில் மண் எடுத்து, அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
காலை மாலை பள்ளி வாகனங்கள் செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. இதை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று (பிப்ரவரி 14) குளத்தில் மண் எடுத்துக் கொண்டிருந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற திற்பரப்பு பேரூராட்சி தலைவர் ரவி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மண் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, பேரூராட்சி சார்பில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மண் எடுக்க சென்ற வாகனங்கள் அனைத்தும் திருப்பி சென்றன.