இந்திய கிரிக்கெட்டில் பல அணிகளும், பல நட்சத்திர வீரர்களும் உருவாகியிருக்கிறார்கள். ஆனால், ஒரு வீரருக்கும் ஒரு நகரத்துக்கும், அந்த நகரத்தின் ரசிகர்களுக்கும் இடையே உருவான பிணைப்பு என்பது தனித்துவமானது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமே மகேந்திர சிங் தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் இடையிலான உறவு.
ராஞ்சியில் பிறந்து வளர்ந்த தோனி, 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து சென்னை அணியுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பு, ஆண்டுகள் கடந்தும் வலுவடைந்துகொண்டே இருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அல்ல என்றபோதிலும், தோனியைத் தங்களில் ஒருவராகவே சென்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அதேபோல், சென்னையையும் அதன் ரசிகர்களையும் தோனி தனது குடும்பத்தின் ஓர் அங்கமாகக் கருதினார். இதனால்தான் அவருக்கு ‘தல’ என்ற அடைமொழியை ரசிகர்கள் வழங்கினர்.
தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021, 2023 என 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. 2010, 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கைப்பற்றியது. கோப்பைகளை வென்றபோது ரசிகர்கள் கொண்டாடினர். அதேநேரத்தில், 2016, 2017-ம் ஆண்டுகளில் தடை காரணமாக சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்காதபோது, அதன் மீள்வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
2018-ல் மீண்டும் களமிறங்கிய சிஎஸ்கே அணி கோப்பையை வென்றபோது, அந்த வெற்றி ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும்போதெல்லாம் மஞ்சள் நிற ஜெர்சியுடன் திரளும் ரசிகர்கள், தோனியின் பெயரை முழங்குவது வழக்கம். தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போதும், சிக்ஸர் அடிக்கும்போதும் எழும் ஆரவாரம் மைதானத்தையே அதிர வைக்கும்.
ஆனால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும் தோனியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையவில்லை. அவர் மைதானத்தில் இறங்கும் ஒவ்வொரு தருணமும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமைந்தது. ஒரு சீசனில் ஜடேஜா விரைவில் ஆட்டமிழக்க வேண்டும். ‘தல’ தரிசனத்தை காண வேண்டும் என ரசிகர்கள் மைதானத்தில் கரகோஷம் எழுப்பியது உணர்வுகளின் வெளிப்பாட்டின் உச்சகட்டம். சிஎஸ்கே என்ற பெயர் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் தோனியின் நினைவு ரசிகர்களின் மனதில் நிச்சயம் எழும் என்பது நிதர்சனம்.














