சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்

0
24

அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 25 ரயில் நிலையங்களும், இரண்டாவது கட்டமாக 44 ரயில் நிலையங்களும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 17 நிலையங்களை அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 15 ரயில் நிலையங்கள் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 7 நிலையங்களில் நடைபாதை மறுசீரமைப்பு பணிகள், பொதுமக்கள் தகவல் அறை, மேற்கூரைகளை மாற்றுதல் உட்பட பல பணிகள் நடைபெறுகின்றன. நடைமேம்பாலம், மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளும் சில நிலையங்களில் ஏற்படுத்தப்படுகின்றன.

மின்தூக்கி, பார்க்கிங் வசதி: சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை மார்க்கத்தில் பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை 6 ஆகிய நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய நிலையங்களில் பணிகள் நடக்கின்றன. பல ரயில் நிலையங்களில் மின்தூக்கி வசதி, பார்க்கிங் வசதி, நிலைய கட்டுமானம் உட்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

80 சதவீத பணிகள் நிறைவு: அதேநேரத்தில் திரிசூலம், குரோம்பேட்டை ஆகிய நிலையங்களில் மேம்பாட்டு பணிக்கு கடந்த 30-ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அங்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. பெரும்பாலான ரயில் நிலையங்களில் 50 சதவீத பணிகளும், சில நிலையங்களில் 80 சதவீத பணிகளும் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here