‘தமிழரசு’ இதழ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவுச் சிலையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட ‘தமிழரசு’ இதழ் 55-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி கடந்த 2023 ஜூன் மாதம் நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரின் ஆலோசனைப்படி தரமணியில் உள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக ‘கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்’ மற்றும் கருணாநிதியின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யபட்டது.
அதன்படி சென்னை தரமணியில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவாக ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்’ மற்றும் கருணாநிதியின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டது. இவற்றை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியையொட்டி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில், தமிழரசு இதழின் வெற்றிப் பயணங்கள் குறித்த புகைப்படங்களின் தொகுப்புகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. அதில் தமிழரசு இதழில் வெளியிடப்பட்ட சிறப்பு வெளியீடுகளின் முகப்பு அட்டைகள், புகைப்படங்கள், கருணாநிதி எழுதிய வாழ்த்து மடல், கடிதங்கள், முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களின் புகைப்படங்கள், முகப்பு அட்டைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இவற்றை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து தமிழரசு அச்சகத்துக்கு சென்று, தமிழரசு இதழ் அச்சடிக்கும் பணிகளையும், அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களையும் பார்வையிட்டார். அப்போது, இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மேயர் பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வராஜ், எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, க.கணபதி, ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.