சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேச அனுமதிக்காததால் பேரவையில் இருந்து பாமகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில், சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேரவை விதிகளை தளர்த்தி தனித்தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக பேசவாய்ப்பு கேட்டார். அதற்கு பேரவைதலைவர் வாய்ப்பு அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நானும், நிதியமைச்சரும் பதிலளித்து விட்டோம். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், நீங்கள், தி.வேல்முருகன் ஆகியோர் என்னைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளீர்கள். நான்உங்களுக்கு சாதகமாகத்தான் உள்ளேன். இதற்கு மேல் நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
அதன்பின், தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தியும், பேச வாய்ப்பு அளிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட அதிகாரம் இருக்கிறது. ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதோடு, பொருளாதாரத்தில் நலிந்திருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை அளிப்பதே இதன் நோக்கம்.
இதன்மூலம் ஒவ்வொரு சாதியில் இருக்கும் ஏழைகள் முன்னேற்றப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றவும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்போவதில்லை என மத்திய அரசு கடந்த ஆண்டே சொல்லிவிட்டது. இதனால் பிற மாநில அரசுகள் எடுக்கின்றன. சமூக நீதியின் பிறப்பிடமாக இருக்கும் தமிழகத்தில்தான் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்திருக்க வேண்டும். இது சமூக நீதி பிரச்சினை.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். காலம் தாழ்த்துவது வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.