வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.