விக்கிரவாண்டி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்: பாமக தரப்பில் மனு

0
118

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுபாமக தரப்பில் தேர்தல் நடத்தும்அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விக்கிரவாண்டிதொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகத்திடம், பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனு நேற்று அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பாலு கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் புகார்களை பெறுவதற்கு உரிய அதிகாரிகள் இல்லை. இந்த தேர்தலில் ஆளும்திமுக, பல்வேறு தில்லுமுல்லுகளை, விதி மீறல்களை செய்யத் திட்டமிட்டு வருகிறது.

வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது, சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

அப்போது அதிகாரியை அமைச்சர் ஒருவர் மிரட்டியதால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, இன்று அலுவலகத்துக்கு வரவில்லை. விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியலில், இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இருந்தன. எனவே, இறந்தவர்கள் பெயர்களை நீக்கி, அந்தப் பெயர்களை ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஒட்ட வேண்டும்.

இந்த இடைத் தேர்தலில் திமுகவினர் கள்ள வாக்கு பதிவு செய்யவாய்ப்புகள் உள்ளன. நியாயமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு புகார்களை அனுப்பிவைப்போம்.

இறந்துபோன 15,000 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்காவிட்டால், எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை கடுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாமக மாவட்டச் செயலாளர் சிவக்குமார் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.