ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி போட்டி!

0
208

கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இடது ஜனநாயக முன்னணியும் இம்முறை அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கேரளத்தில் பிறந்த இவர், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். இதுபோல் திருவனந்தபுரம் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்ததலைவர் பன்னியன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்
பட்டுள்ளார்.

முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் திரிச்சூர் தொகுதியிலும் சி.ஏ. அருண்குமார் மாவேலிக்கரா தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் வெளியிட்டார். அவர் கூறும்போது, “இடதுசாரி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here