பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்: எஸ்சி, மனித உரிமை ஆணையங்களில் தமிழக பாஜக புகார்

0
49

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்சி, மனித உரிமை ஆணையங்களை தமிழக பாஜக குழுவினர் வலியுறுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் வி.பி.துரைசாமி தலைமையிலான குழுவினர் தேசிய பட்டியலின ஆணையம், மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட புதுடெல்லிக்கு சென்றனர். உடன் மாநில பொதுச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி,கார்த்தியாயினி, முன்னாள் எம்.பி.குழந்தைவேலு உள்ளிட்டோரும்சென்று மனு அளித்தனர். அம்மனுவில், கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, புதுடெல்லியில் உள்ள தேசிய பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பட்டியலின மக்கள் மீதான வன்முறை இரட்டிப்பாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சட்ட ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்கிறார். அவருக்கு கள்ளக்குறிச்சி செல்ல ஏன் வழி தெரியவில்லை. அவர் கள்ளக்குறிச்சி சென்று கள்ளச்சாராயத்தால் மரணமடைந்த குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிய வேண்டும்.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 22 வயதுடைய பட்டியலின பெண் 8 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களில் இருவர் திமுக இளைஞரணி நிர்வாகிகள். அவ்வாண்டு மே மாதம் பாஜக பட்டியலின அணி நிர்வாகி பாலச்சந்தர் சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் மாதத்தில் திமுக அமைச்சர் பொன்முடி, பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் நீங்கள் என்ன சாதி, பட்டியலினத்தவரா என்று கேட்டார். வேங்கைவயலில் மலம் கொட்டப்பட்ட சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆனபோதும்,குற்றவாளிகளை கண்டறியவில்லை. இவையெல்லாம் சிலசம்பவங்கள்தான். திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மற்றும்தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்கள் நாளுக்கு நாள் சித்ரவதைகளை எதிர்கொள்கின்றனர். சமூகநீதிக்கான முன்னோடி என தங்களை திமுக அரசு சொல்லிக் கொள்கிறது. அவர்கள் எந்த சமூக நீதியையும் பின்பற்றுவதில்லை. எனவே, சமூகநீதிகுறித்து பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தார்மிக உரிமையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்திலும் பாஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.