கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர் பாப்லோ எஸ்கோபார். இவருக்கு லத்தீன் அமெரிக்காவில் மிகப் பெரிய தனியார் உயிரியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடந்த 1980-ம் ஆண்டுகளில் 3 பெண் நீர்யானைகள் மற்றும் ஒரு ஆண் நீர்யானை கொலம்பியாவுக்கு இறக்குமதி செய்தார். அவற்றை புயெர்டோ ட்ரியூன்ஃபோ பகுதியில் உள்ள தனது பண்ணையில் வளர்த்தார்.
தற்போது இவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து 160 ஆக உயர்ந்துள்ளது. இது தற்போது ஹேசிண்டா நாப்போல்ஸ் உயிரியல் பூங்காவாக மாற்றப்பட்டு சுற்றுலா தலமாக பயன்படுத்தப்படுகிறது. நீர்யானைகளின் இனப்பெருக்கம் உள்ளூர் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இதனால், இவற்றில் 80 நீர்யானைகளைக் கொல்ல கொலம்பியா அரசு திட்டமிட்டது.
இல்லையென்றால், 2030-ம் ஆண்டுக்குள் நீர்யானைகள் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 80 நீர்யானைகளைக் கொல்லும் முடிவு உலகம் முழுவதும் உள்ள விலங்கு நல ஆர்வலர்களை வேதனையடைச் செய்தது.
இது பற்றி தகவல் அறிந்த இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, 80 நீர்யானைகளையும் கொல்லாமல், குஜராத்தில் உள்ள தனது வனவிலங்கு பூங்காவான ‘வன்தாரா’ கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும் என கொலம்பியா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கு 1,50,000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் இயற்கையான சூழலில் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.














