கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்காக இரு தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரள மக்கள் தொகையில் சுமார் 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர். அந்த மாநிலத்தில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் செயல்படுகின்றன. இந்த சபைகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், பிரமடத்தில், செயின்ட் ஜான்ஸ் பெத்லேகம் தேவாலயம் உள்ளது. ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையும், மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையும் இந்த தேவாலயத்தை சொந்தம் கொண்டாடி வருகின்றன.
தற்போது ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் தேவாலயம் உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையைச் சேர்ந்த பாதிரியார், நிர்வாகிகள் திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்து தனியாக ஆராதனை நடத்த முயன்றனர். இதை ஜேக்கபைட் சபை நிர்வாகிகள் தடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. பாதிரியார்களும் சண்டையில் களமிறங்கினர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து ராமமங்கலம் பகுதி போலீஸார் தேவாலயத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் விலக்கி விட்டனர்.
இதுதொடர்பாக மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையின் பாதிரியார் அபின் ஆபிரகாம் உட்பட அந்த சபையைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையை சேர்ந்த பாதிரியார் லால்மோன் தம்பி உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தேவாலயத்துக்குள் தாக்குதலில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.















