ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம், 5 தோல்விகள் என 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டம் உட்ட எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 17 புள்ளிகளை எட்டலாம்.
இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் மற்றும் நிகர ரன் ரேட் ஆகியவற்றை பொறுத்தே கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு தெரியவரும். இதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாயந்ததாக மாறி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
நடப்பு சீசனில் சவாலான ஆடுகளங்களில் பேட்டிங் செய்ய முடியாமலும், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி திணறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க அருண் ஜேட்லி மைதானம் அந்த அணிக்கு கைகொடுக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் நடப்பு தொடரில் டெல்லி அணிக்கு இந்த மைதானம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களது சுழலால் மேஜிக் நிகழ்த்தக்கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டிக்கான ஆடுகளத்தை பேட்டிங்கிற்கு சாதகமான வகையில் டெல்லி அணி தேர்வு செய்யக்கூடும். அந்த வகையில் 6-வது ஆடுகளம் பயன்படுத்தக்கூடும். இந்த ஆடுகளத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 264 ரன்கள் குவித்த போதிலும் வெற்றி பெற முடியாமல் போனது.
இந்த முடிவிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம், டெல்லி அணியின் பேட்டிங் வரிசை மீது நிர்வாகத்துக்கு இருக்கும் நம்பிக்கையின்மைதான். இதற்கு சான்றாக, ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டம் அமைந்தது. சமீபத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
இந்த மோசமான செயல் திறன், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்தால் தங்களது பேட்டர்களால் அதைச் சமாளிக்க முடியாது என்ற அச்சம் டெல்லி அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருந்தாலும், பேட்டர்களுக்கு வசதியான ஆடுகளத்தை அவர்கள் நாடுகின்றனர்.
ஏனெனில் பந்து நன்கு பிடிமானம் கிடைக்கக்கூடிய வேகம் குறைந்த ஆடுகளங்களில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டர்கள் தடுமாறுவது ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷித் கான், சிஎஸ்கே அணியின் அகீல் ஹொசைன், நூர் அகமது ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியிருந்தனர்.இந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி அணியின்
கே.எல்.ராகுல், பதும் நிசங்கா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கருண் நாயர் ஆகியோரை உள்ளடக்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும். அதேவேளையில் டெல்லி அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் பார்மின்றி தவித்து வருகிறார். நடப்பு சீசனில் 10 ஆட்டங்களில் 7 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 10.36 ரன்களை வாரி வழங்கி உள்ளார். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில், தெளிவான மாற்றுத் திட்டம் ஏதுமற்ற, சராசரி அணியாகத் தென்படும் டெல்லி கேப்பிடல்ஸுக்கு இருக்கும் ஒரே வழி பேட்டிங்கிற்கு தட்டையான ஆடுகளத்தில் விளையாடுவது மட்டுமே.
இது போன்ற தட்டையான ஆடுகளம் இதுவரை சிறப்பாகச் செயல்படாத டெல்லி அணியின் பேட்டர்களுக்கு பெரிய ஸ்கோரை எட்டும் வாய்ப்பை வழங்கும். முதலில் அதிக ரன்களைக் குவித்துவிட்டு, பின்னர் பந்துவீச்சாளர்கள் மூலம் அந்த இலக்கைத் தக்கவைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டக்கூடும். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியைக் கட்டுப்படுத்தி வெற்றியை உறுதி செய்வார்கள் என்று டெல்லி அணி மலைபோல நம்பியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இருக்கும் ஒரே சாதகமான அம்சம் என்னவென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலவீனமான முன்வரிசை பேட்டிங்தான். கொல்கத்தா அணியின் முன்வரிசை பேட்டிங்கில் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் கேப்டன் அஜிங்க்ய ரஹானே (205 ரன்கள், ஸ்டிரைக் ரேட் 131.42), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (268 ரன்கள், ஸ்டிரைக் ரேட் 137.43) ஆகிய இருவரும் பெரும்பாலான போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு அதிரடி காட்டவில்லை.
இதைப் பயன்படுத்தி, மிட்செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி வேகக்கூட்டணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினால், கொல்கத்தா அணியை எளிதில் நெருக்கடிக்குள்ளாக்க முடியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற வெற்றிகளில் ரிங்கு சிங்கின் (245 ரன்கள், 145.39 ஸ்டிரைக் ரேட்) அபாரமான ஆட்டம் முக்கியமான காரணமாக இருந்தது. இக்கட்டான நேரங்களில் அணியைத் தாங்கிப் பிடிக்கும் பொறுப்பை ரிங்கு சிங் மட்டுமே வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.
அவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரும்பாலும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சுனில் நரைன், மற்றும் வருண் சக்ரவர்த்திதான். சுனில் நரைன் 9 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்குத் தூணாக நின்றுள்ளனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சில் பிரச்சினைகள் அடுக்கடுக்காக நீண்டுகொண்டே போகின்றன. அந்த அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் தனது தனிப்பட்ட ஆட்டத்திறனில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 445 ரன்கள் குவித்துள்ள அவர், தனது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஸ்டிரைக் ரேட்டான 180-க்கும் மேல் (180.89) வைத்துள்ளார்.
ஆனாலும், டி20 கிரிக்கெட்டின் தற்போதைய பரிணாம வளர்ச்சி அவரது இந்த அதிரடியையும் ஒரு ‘சராசரி’ ஆட்டமாகவே காட்டுகிறது. ஏனெனில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரது ஸ்டிரைக் ரேட் 200-க்கும் அதிகமாக உள்ளது. மற்றொரு தொடக்க வீரரான பதும் நிசங்கா 9 போட்டிகளில் விளையாடி வெறும் 228 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து அணியில் நீடிக்க வைக்கும் நிர்வாகத்தின் முடிவு புரியாத ஒன்றாகவே உள்ளது.
வலைப்பயிற்சியில்கூட பந்துகளைச் சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் கருண் நாயரை ஆடும் லெவனில் சேர்ப்பதும் எந்தவித லாஜிக்கும் இல்லாத முடிவாகப் பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், நிதிஷ் ராணா இன்னும் ‘ஷார்ட் பால்’ பலவீனத்திலிருந்து மீளவில்லை. வேகப்பந்து வீச்சில் முகேஷ் குமார், டி.நடராஜன், ஆகிப் நபி தார் ஆகியோர் ஓவருக்கு முறையே 11, 11.18 மற்றும் 13.42 ரன்களை தாரை வார்த்துள்ளனர்.
நடப்பு சீசனில் அந்த அணியில் எந்த பந்துவீச்சாளரும் இரட்டை இலக்க விக்கெட்டை கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக அக்சர் படேல் 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டுமானால் புதிய யுத்திகளுடன் அனைத்து துறையிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
