ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி வரும் 23-ம் தேதி இஸ்லாமாபாத் சென்றடையும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்பார்களா என்பதில் சந்தேகம் எழுந்தது. ஏனெனில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திரங்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் வரும் 24-ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் 26-ம் தேதி தொடங்குகிறது. இதன் பின்னர் 31-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இந்த தகவலை ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
அந்த அணி தற்போது 14 புள்ளிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் நிலையில் உள்ளது.இவர்களுடன் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் ஆர்சிபி அணிக்காவும், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், சேவியர் பார்ட்லெட், மார்கஸ் ஸ்டோனிஸ், கூப்பர் கானோலி பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், மேத்யூ ஷார்ட் சிஎஸ்கே அணிக்காகவும், மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், கேமரூன் கிரீன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காகவும், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் ஆகியோர் ஆர்சிபி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
இவர்களில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினால் கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் லீக் சுற்றுக்குப் பிறகு ஐபிஎல்-லிருந்து வெளியேறக்கூடும். டெல்லி அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
மறுபுறம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் பின்தங்கியுள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமே. இதனால் மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஷ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடக்கூடும். அதேவேளையில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு இருப்பதால் ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
இருப்பினும் இதுவரை பாகிஸ்தான் தொடருக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
