காயத்தால் இலங்கை தொடரில் இருந்து பும்ரா ‘விலகல்’ – பிசிசிஐ மறைக்கும் மர்மம் என்ன?

0
16

ஐபிஎல் தொடரில் ஆடும்போது பும்ரா காயமடைகிறாரா, அதே காயத்துடன் விளையாடப் பணிக்கப்படுவதால் சர்வதேசத் தொடர்களின் போது காயமடைகிறாரா? அவரால், ஏன் தொடர்ந்து ஐபிஎல் ஆட முடிகிறது.. ஆனால், சர்வதேச தொடர்களை அரையும் குறையுமாக ஆடுகிறார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் 15 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் பயணம் செய்யமாட்டார்.

காயத்தின் தன்மை என்ன? அதன் தீவிரம் எத்தகையது? போன்ற விவரங்கள் வழமை போல் மறைக்கப்படுகின்றன. நவீன பிசிசிஐ செயல்பாடுகள் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மூடு மந்திரமாக செயல்பட்டு வருகிறது. 140 கோடி மக்களும் ரசிக்கும் ஒரு பிரபல ஆட்டத்தை நிர்வகிக்கும் அமைப்பு இப்படி மூடு மந்திரமாகச் செயல்படுவது கவலைக்குரியதே.

இடது முழங்காலில் நீடித்து வரும் பிரச்சினையிலிருந்து முழுமையாக குணமடைய பும்ராவுக்கு மேலும் ஓய்வு தேவைப்படுவதாக பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் அவருக்கு மாற்றாக அகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜூலை 16 அன்று கார்டிஃப்பில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு பும்ரா பந்து வீசவில்லை.

அந்தப் போட்டியில் பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட ‘இம்பாக்ட்’ காயம் காரணமாக, லார்ட்ஸில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது.

இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன், பிசிசிஐ மருத்துவக் குழு வகுத்த நீண்ட கால உடல்தகுதி திட்டத்தின் ஒரு பகுதியாக பும்ராவுக்கு முழங்காலில் ஊசி (Injection) சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர்மட்ட செயல்திறனுக்கான சிறப்பு மையத்தில் (Centre of Excellence) உடல்தகுதி பரிசோதனைகளை மேற்கொண்டார்.

தற்போது மீண்டும் பந்துவீச தொடங்கினால் முழங்கால் பிரச்சினை மோசமடையும் அபாயம் உள்ளது. இதனால் அவர் இன்னும் நீண்டகாலம் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படக்கூடும். எனவே முழுமையாக குணமடைந்த பிறகே போட்டிகளில் களமிறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஏற்கெனவே ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த நிலையில், வளர்ந்து வளரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் நீண்ட நாள் காயத்தில் அவதியுற்று வரும் நிலையிலும் பும்ராவின் காயம் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

அதுவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இலங்கைக்கு எதிராக தோற்கக் கூடாது என்ற நிலையில் இந்தக் காயங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளன.

“ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் ஒரு வீரர் காயம் காரணமாக அணியில் இல்லாத நிலை ஏற்பட்டால், எங்கோ நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்பதற்கான அறிகுறிதான்” என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான காயங்களால் சவாலான சூழ்நிலையை இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது. இலங்கை டெஸ்ட் தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாதது, அணியின் சமநிலைக்கும் செயல்திறனுக்கும் பெரிய சோதனையாக அமையும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், சாய் சுதர்ஷன், ரவீந்திர ஜடேஜா, சரன்ஷ் ஜெயின், மானவ் சுதர், குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அகிப் நபி.

அகிப் நபி: 29 வயதான அகிப் நபி, ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். கடந்த ரஞ்சி சீசனில் 60 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஐபிஎல் சீசனில், மணிக்கு 133 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசி இருந்தார். அணியில் அவர் தேர்வாகதது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், பும்ரா விலகிய சூழலில் அணியில் அகிப் நபி வாய்ப்பு பெற்றுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here