இங்கிலாந்தின் லண்டனிலிருந்து சிகாகோ நகருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அயர்லாந்துக்கு மேல் பறந்தபோது 28 ஆயிரம் அடி கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் மீண்டும் லண்டனுக்குத் திரும்பியது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிஏ295 என்ற விமானம் நேற்று லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள சிகாகோவுக்குப் புறப்பட்டது. போயிங் 777-200இஆர் ரக விமானமான இது, சிகாகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைய 8 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இந்நிலையில் அயர்லாந்து நாட்டின் வான்பரப்பு மீது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், திடீரென 28 ஆயிரம் அடி கீழே இறங்கி 9 ஆயிரம் அடி உயரத்துக்கு வந்தது.
கடந்த வாரம் துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃபிளைதுபாய் விமானத்தை மோதச் செய்ய முயற்சி நடந்த நிலையில், சிகாகோ விமானம் திடீரென அதிக உயரத்திலிருந்து கீழே இறங்கியதால் பயணிகள் பயத்தில் அலறினர். இதைத் தொடர்ந்து ஸ்குவாக் 7700 (Squawk 7700) எனப்படும் விமானங்களால் பொதுவான அவசர நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிரான்ஸ்பான்டர் குறியீட்டு சமிக்ஞை விமானத்திலிருந்து அனுப்பப்பட்டது. இந்த அவசரநிலைக்கான காரணம் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து விமானிகளுக்கு கிடைத்த உத்தரவின் பேரில் மீண்டும் விமானம் இங்கிலாந்துக்குத் திருப்பப்பட்டது. ஆங்கிலக் கால்வாயின் மீது சில முறை விமானம் வட்டமடித்த நிலையில் விமானம் மீண்டும் லண்டனில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். விமானத்தின் உயரம் திடீரென அதிக அளவு குறைந்ததால் பயணிகளும், விமான ஊழியர்களும் சில நிமிடங்கள் திகிலில் உறைந்தனர்.














