இந்தியாவுக்கு எதிரான போட்டி புறக்கணிப்பு நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவே: பாக். பிரதமர்

0
207

இந்தியா, இலங்கையில் நடைபெறும் ஐசிசி 2026 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது முறையான செயலே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை தனது அமைச்சரவை உறுப்பினர்களிடம் பேசிய பிரதமர் ஷெரீஃப், “டி20 உலகக் கோப்பை குறித்து நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். விளையாட்டு மைதானத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தியாவுக்கு எதிரான போட்டியை விளையாட மாட்டோம் என்று முடிவு செய்தோம். இது நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு. வங்கதேசத்துடன் முழுமையாக நாங்கள் நிற்க வேண்டும், அது சரியான தீர்மானமே.” என்று கூறினார்.

முன்னதாக வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களைச் சுட்டி இந்தியாவில் ஆடமாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஆனால் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான குழு ஆட்டத்தில் விளையாடாது என்று தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக PCB இதுவரை எந்த பொதுக் கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், அந்த அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒரு அறிக்கை வெளியிட்டு, “இந்த முடிவு பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலகளாவிய கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இதனை PCB கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது சிலபல தடைகளும் வரலாம் என்று ஊடகக் கணிப்புகள் சில வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர், ‘நன்கு பரிசீலிக்கப்பட்ட தெளிவான முடிவே’ என்று இந்தியாவுக்கு எதிரானப் போட்டிப் புறக்கணிப்பை நியாயப்படுத்தியுள்ளமை ’கிரிக்கெட்டில் அரசியல் கூடாது’ என்ற நிலைப்பாட்டிற்கு எதிராகவே முடிவை எடுத்து தன் முரண்பாட்டை நிறுவியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, “இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. ஒரு நாட்டுக்கு, அதாவது இந்தியாவுக்கு, அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதி வழங்கி, மற்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை எடுத்துக் கொள்ள முடியாது. 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுத்ததையும் இதே போன்று பார்த்திருக்க வேண்டும். வங்கதேசத்திற்கு அநீதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்.” என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here